மேலும்

பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கை

mavai-senathirajahசிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்த போதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரைக்கும் ஆதரவாக இருந்தது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். அவர்களை உயர்வாக மதித்தோம்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவ  மயமாக்க முயன்ற மகிந்த ராஜபக்சவை நமது கட்டுக்கோப்பான ஒற்றுமையால் – வாக்குரிமை என்ற ஆயுதத்தால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் நாள் விரட்டினோம்.

அதேபோன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது உணர்வுகளையும் ஒற்றுமையையும் சரியான முறையில் பயன்படுத்தி எமது பேரம் பேசும் சக்தியை உலகுக்கு உணர்த்தவேண்டும்.

நமது போராட்டங்களும் தியாகங்களும் வீண் போகக்கூடாது.

மகிந்த ராஜபக்‌ச போர்க்குற்றங்களுக்காக அனைத்துலக விசாரணைக்கு மட்டுமல்ல, பல்வேறு ஊழல், மோசடி விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியவர்.

சில நாட்களுக்கு முன் மகிந்த மீது 2,481 மில்லியன் ரூபா மோசடி தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க நமது வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது எமது மக்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.

மகிந்த ராஜபக்‌சவும், ரணில் விக்கிரமசிங்கவும் இனவாதிகள்தான். இவர்கள் நம்மை அடக்கியாள முனைபவர்கள் தான்.

டக்ளஸ் தேவானந்தாவும் கஜேந்திரகுமாரும் இவர்களுக்குத் துணைபோகின்றனர். நாம் சமஷ்டி என்றவுடன் இவர்கள் கொதிப்படைகின்றனர்.

இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களையும் நாம் ஒற்றுமையுடன் தோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்குத் தமிழ் மக்களின் ஆணை வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *