மேலும்

சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க

champika-ranawakaசீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும்  வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து விளக்கமளித்தார்.

கொழும்புத் துறைமுகமோ, துறைமுக நகரமோ, எந்தவகையான இராணுவ நடவடிக்கைக்கும் சீன அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டால், அது  இந்தியாவிலும் சிறிலங்காவிலும் மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எனவே, இவை வணிக நோக்கம் மட்டும் கொண்டவை என்பதை நாம் வரையறுக்க வேண்டும்.

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள சீனாவின் கொள்கலன் இறங்குதுறைக்கு, சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டு வருகை தந்தது, இந்தியாவுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சிறிலங்காவின் வணிக செயற்பாடுகளில் இந்தியா தலையீடு செய்யக் கூடாது.

ஆனால் அது ஒரு இராணுவ விவகாரமாக இருந்தால், இரகசியமாக ஏதேனும் நடந்தால், அது பிரச்சினையாகும்.

ஆனால், வணிக ரீதியாக, கடலில் ஒரு நிலப்பகுதியை அமைப்பது சிறிலங்காவின் உரிமை.

சிறிலங்கா எமது வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் கொடுத்து இந்தியாவின் இந்திரா காந்தி அரசாங்கம் சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால், திருகோணமலையில் கடற்படைத் தளத்தை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக இந்தியா அச்சம் கொண்டிருந்தது.

portcity

கடல் மணலைக் கொட்டி புதிய நிலப்பரப்பை உருவாக்கும் சீனக் கப்பல்

சீன அரச நிறுவனத்துக்குச் சொந்தமாக நிலத்தைக் கையளிக்க இணங்கும் திட்டம் தான் கவலை கொள்ள வைக்கிறது.

கடலில் இருந்து நிலத்தை அமைப்பது தொடர்பான எந்த சட்டமும் சிறிலங்காவில் இல்லை.

சிறிலங்காவின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் நிலத்தில், அதன் சட்டங்கள் தான் இருக்க வேண்டும்.

கடுவெல பகுதியில் இருந்து மில்லியன் கணக்கான தொன் எடையுள்ள பாறைகளை பிரித்தெடுத்தால், ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

மில்லியன் கணக்கான தொன் மணல் கடல் படுகையில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுவதால் ஏற்படும், பாதிப்புக் குறித்து ஏதும் தெரியாது.

நாம் அதுபற்றி எதைச் சிந்தித்தாலும், சீனா இப்போது ஒரே வல்லரசாக உள்ளது.

அதனுடனான நிதிச் செயற்பாடுகளால் கவலை கொள்கிறோம். எமக்கு அது தெரிய வேண்டும்.

இந்த அரசியல், நிதி யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள் 60 வீதமான டொலர் கையிருப்பை வைத்துள்ளனர்.  நாம் சீனாவின் குறுநில அரசாகி விடக்கூடாது.

ஆனால், நாம் அவர்களிடம் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *