மேலும்

அச்சு ஊடகங்களுக்கு ரணில் கடும் எச்சரிக்கை

Ranil-wickramasingheசில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டு,  இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

குருநாகலில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,  சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அச்சு ஊடகங்களுக்கு எதிராக நடவபடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“நாட்டில் இன நல்லுறவைக் கெடுக்கும் முயற்சிகள் தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதற்காக, உள்ளூர் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்களை அழைத்துப் பேசத் திட்டமிட்டுள்ளேன்.

ஊடக உரிமையாளர்கள் குறித்து கவலை எழுப்பப் கூடிய ஊடக உரிமை அமைப்புகளையும், அந்தக் கூட்டத்துக்கு அழைக்கவுள்ளேன்.

எந்தவொரு ஊடக உரிமையாளரேனும், கலந்து கொள்ளாவிடின் அதை நாம் கவனத்தில் கொள்வோம்.

சிறிலங்காவில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுப்பதற்கு இடமளிக்கும் வகையில் புதிய அரசாங்கம் செயற்படுவதாக, சிங்கள நாளிதழ்கள் சிலவற்றில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இந்த ஊடகங்களின் சில தலைவர்களும், பல ஊடகவியலாளர்களும், முன்னைய ஆட்சியாளர்களிடம் பணம் பெற்று வந்தவர்கள்.

தற்போது அவர்கள் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட முடிகிறார்கள்.

சில நாளிதழ் உரிமையாளர்கள், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்தனர். இப்போது அவர்கள் புதிய அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்க முனைகிறார்கள்.

இத்தகைய எந்த முயற்சியையும், எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.

சில நாளிதழ்கள் என்னை அரசியலில் இருந்து அகற்ற முனைந்தன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அது நடக்கவில்லை.

இறுதியாக, கடந்த மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்த முனைந்தன. ஆனால் அதிலும் தோல்வி கண்டன.

அடுத்த தேர்தலில் எந்த நாளிதழும், மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது குறித்து எனக்குப் பிரச்சினையில்லை.

ஆனால், இனநல்லுறவைக் கெடுக்கும் முயற்சியில் எவரேனும் ஈடுபட்டால் அதனை கடுமையான விவகாரமாக எடுத்துக் கொள்வேன்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *