மேலும்

சிறிலங்கா அதிபர் முன் உள்ள சவால்கள் – அனைத்துலக ஊடகம்

ராஜபக்சக்களால் அனுமதிக்கப்பட்ட சீனாவை சிறிலங்கா தனது நாட்டிலிருந்து வெளியேற்றினால் இந்தியா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இந்த விடயத்தில் சிறிலங்காவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இவ்வாறு economist இதழில், வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்ட நிலையில், அவர் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை பயணிகள் விமானம் ஒன்றில் மேற்கொண்டதானது இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவருக்கு முன்னர் சிறிலங்காவில் நீண்டகாலமாக எதேச்சதிகார ஆட்சியைத் தனது குடும்பத்தாருடன் இணைந்து நடத்திய மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை விமானப்படைக்குச் சொந்தமான தனித்துவமான விமானத்திலேயே மேற்கொள்வது வழக்கமாகும்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போதைய அதிபர் பயணிகள் விமானத்தில் இந்தியாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதானது இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறிலங்கா அதிபரின் இந்தியாவுக்கான பயணமானது பிறிதொரு வகையிலும் நோக்கப்படுகிறது.

அதாவது சிறிலங்காவிற்கு அதிக கடனை வழங்கியுள்ளதும் ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் மிக முக்கிய நட்பு நாடாகவும் விளங்கிய சீனாவைக் குழப்பத்திற்கு உள்ளாக்காது உடைந்து போயிருந்த நட்புறவை இந்தியாவுடன் மீளவும் கட்டியெழுப்புவதே இப்பயணத்தின் மிக முக்கிய நோக்காகும்.

வடக்கில் வாழும் தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நடத்திய விதமானது பெரும்பாலான இந்தியர்களைக் குறிப்பாக இந்தியத் தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கொடிய யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், வடக்கிற்கு அதிக அதிகாரத்தை வழங்கி அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றாது நிலைமையை மேலும் மோசமடையச் செய்தார்.

கடந்த ஆண்டு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சீன நீர்மூழ்கிக்கப்பல் இரண்டு தடவைகள் தங்குவதற்கு அனுமதியை வழங்கியதன் மூலம் ராஜபக்ச இந்தியாவை எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.

அதிபர் சிறிசேன இந்தியாவுக்கான தனது பயணத்தை முடித்த பின்னர், தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பயணத்தின் போது, சிறிலங்காவின் முதலாவது சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உட்பட சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதிக உடன்பாடுகள் எட்டப்படாத போதிலும், சிறிலங்காவுடனான புதிய உடன்படிக்கைகள் சீனாவின் இலக்குகளை முறியடிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளாகும் என இந்திய ஊடகம் ஒன்று விபரித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, கடந்த 28 ஆண்டுகளின் பின்னர் முதன்முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கான தனது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் இப்பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

ராஜபக்சக்களால் அனுமதிக்கப்பட்ட சீனாவை சிறிலங்கா தனது நாட்டிலிருந்து வெளியேற்றினால் இந்தியா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இந்த விடயத்தில் சிறிலங்காவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப் பெறவில்லை.

சிறிசேனவைப் பொறுத்தளவில் முதலீடு என்பது தேவைப்பாடான விடயமாகும்.

கொழும்புத் துறைமுகத்தில் சீனாவால் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியில் மேற்கொள்ளப்படும் திட்டத்தை சிறிசேன நிறுத்தமாட்டார்.

ஆனால் இது தொடர்பாகவும் சீனாவின் பிற திட்டங்கள் தொடர்பாகவும் மீளவும் ஆராயப்படும்.

‘மூலோபாய ஒத்துழைப்பைப்’ பலப்படுத்துவது தொடர்பான தனது திட்டத்தை முன்னுரிமைப்படுத்துவதற்காக சீனா தனது அதிகாரிகளை சிறிலங்காவுக்கு அனுப்பியதன் மூலம் சிறிலங்கா தற்போது இந்தியாவுடன் கொண்டுள்ள நல்லுறவு தொடர்பான தனது பதிலை சீனா வழங்கியுள்ளது.

மார்ச் மாதத்தில் சிறிசேன சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறிப்பாக வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக அதிகம் கவலை கொள்ளும் மேற்குலக நாடுகளைச் சமாதானப்படுத்தவும் சிறிசேன விரும்புகிறார்.

இவருக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த அதிபர் இவ்வாறான மீறல்களை விசாரணை செய்வதற்கான நம்பகமான விசாரணையை முன்னெடுப்பதற்கு மறுத்துவிட்டார்.

சிறிலங்கா பொருத்தமான விசாரணையை மேற்கொள்வதற்கு அனுமதிக்காததால் அடுத்தமாதம் வெளியிடப்பட வேண்டிய ஐ.நா விசாரணையின் பெறுபேறு செப்ரெம்பர் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் யூன் மாதத்தில் இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னர் மைத்திரிபால சிறிசேன உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் யாப்பு சீர்திருத்தம், சுதந்திரமாகத் தகவல்களை வெளியிடுதல் தொடர்பான சட்டம், உணவு விலைகளைக் குறைத்தல், ஒவ்வொரு பட்டிணத்திலும் Wi-fi சேவையை இலவசமாக வழங்குதல் உட்பட பல்வேறு சீர்திருத்தங்கள் தனது முதல் 100 நாள் ஆட்சியில் மேற்கொள்வேன் என அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால் இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை. புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  கூட்டணி அரசாங்கம் பல்வேறு கட்சிகளைக் கொண்டது. இது ஒரு அச்சாறு என உள்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

இதேவேளையில், மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

தகவல் சுதந்திரம் தொடர்பான சட்டத்தை அமுலாக்குவதாக வாக்குறுதி வழங்கிய போதிலும் இது தொடர்பான எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை.

தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராகப் புதிதாக நியமிக்கப்பட்டதானது நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று வடக்கு மாகாணத்திற்கென நியமிக்கப்பட்ட இராணுவ ஆளுநர் நீக்கப்பட்டு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் சிறிசேனவின் ஆட்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்ற போதிலும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் ஒரு பகுதி மக்களிடம் விரைவில் கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், தேர்தல் தொடர்பாக அரசியல்வாதிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவர். பெப்ரவரி 18 அன்று மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் போது ராஜபக்ச பிரதமராக வேண்டும் எனக் கோரப்பட்டது.

ஆனால் இது சாத்தியமில்லை என்பதை நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் பெறுபேறுகள் காண்பிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *