கொழும்பு வந்தார் நிஷா பிஸ்வால் – இன்றும் நாளையும் முக்கிய பேச்சு
தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று அதிகாலை கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.
லண்டனில் இருந்து யு.எல்-506 விமான மூலம் இன்று அதிகாலை 5 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, நிஷா பிஸ்வால், கொழும்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரைச சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவது, சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள் குறித்து அவர் சிறிலங்கா தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.
நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசவுள்ள நிஷா பிஸ்வால், யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.