மேலும்

வடக்கில் கோத்தா அபகரித்த தமிழ்மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சம்பிக்க ரணவக்க

champika-ranawakaவடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“வடக்கில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில இடங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் அவ்வாறே கணிக்கப்படும்.

ஆனால், கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலராக இருந்த  கோத்தாபய ராஜபக்ச தன்னிச்சையாக தனது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும் தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றியுள்ளார்.

அவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீண்டும் தமிழ் மக்களுக்கே வழங்குவோம்.

தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இந்தப்ப் பிரச்சினை சிங்கள மக்களுக்கும் உள்ளது.

பாணமையில் உயர் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டதால், அங்கு வாழ்ந்த 4000க்கும் மேற்பட்ட சிங்கள விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட காணிகளில், சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களில் படையினர் கோல்ப் விளையாட்டுத் திடல் அமைப்பது தவறானது.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி மக்களின் காணிகளை உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக கைப்பற்றுவது வேறு விடயம்.

ஆனால் தனிப்பட்டவர்களின் வர்த்தகத்திற்காக உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறிக் கொண்டு காணிகளை கைப்பற்றுவது தவறானது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ராஜபக்ச என்ற புற்றுநோயை ஒழித்துக்கட்டி அதனை தூய்மைப்படுத்த வேண்டும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த போதும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் அவர் ஈடுபடமாட்டார் என நம்புகிறேன்.

மைத்திரிபால சிறிசேனவை அதிபர் பதவியில் அமர்த்த ஐ.தே.கட்சி மாபெரும் அர்ப்பணிப்பை செய்ததை மறந்து விடக் கூடாது.

அதேவேளை, நூறு நாள் வேலைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பலம் தேவை.

அத்துடன் பண்டாரநாயக்க சிந்தனையை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முன்னெடுத்து ராஜபக்சவை ஒழித்துக் கட்ட வேண்டும்.

இவ்வாறு பாரிய கடப்பாடுகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டியுள்ளது.

அவர் கிராமத்தில் பிறந்தவர். எனவே பிரச்சினைகளை திறமையாக தீர்த்து வைப்பார் என்பது நிச்சயம்.

எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சினைகள் தலைதூக்காது” என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *