மேலும்

ராஜீவ் கொலை விசாரணையில் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை – முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

rajiv-book-releaseராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்டில் புதுடெல்லியில் வெளியிடப்பட்ட, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் ஃபராஸ் அகமது எழுதிய Assassination of Rajiv Gandhi: An Inside Job? என்ற ஆங்கில நூலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

“ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது எனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை

ராஜீவ் காந்தி கொலையை சிவராசன் நடத்தியிருந்தாலும், அவர் யார் என்று சித்தரித்த விதம் யூகத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.

ராஜீவை கொல்வதற்கு 3 முயற்சிகள் நடந்தன. அந்த 3 முயற்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவை அல்ல.

ஆனால், சிறிபெரும்புதூரில் நடந்த சம்பவம் புலிகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, கொலையை செய்தது விடுதலைப் புலிகள் தான் என்று முதல் நபராக கூறினார்.

அவரைத் தான் நான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஒரு விசாரணை அதிகாரியாக, களத்திலிருந்து தான் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். தனிப்பட்ட நபரை விசாரிக்க முடியாது.

ராஜீவ் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆர்.கே.ராகவன், குண்டுவெடிப்பு நடந்து 12 மணி நேரத்துக்கு பிறகும், ‘இது சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியவில்லை’ என்றார்.

rajiv-book-release

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த ஒளிப்படக் கருவியில் இருந்த முக்கிய சாட்சியங்களை காவல்துறையைச் சேர்ந்த ஒளிப்படக்காரர் எடுத்துச் சென்றார்.

அதை நாங்கள் போராடியே பெற்றோம். இதுபோன்ற நிறைய சிக்கல்கள் விசாரணையின் போது ஏற்பட்டன.

ராஜீவ் கொலை வழக்கு பற்றி நான் புத்தகம் எழுதியிருந்தேன். இப்போது ஃபராஸ் அகமதும் எழுதியுள்ளார். இதில் நிறைய கேள்விகள் எழுப்பட்டுள்ளன.” என்று ரகோத்தமன் தெரிவித்தார்.

நூலாசிரியர் ஃபராஸ் அகமது பேசும்போது, ‘‘சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இந்தக் கொலைக்காக அவரை இயக்கியதில் பிரபாகரனுக்கு எந்த தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தக் கொலை, சிறிலங்கா அரசுக்கும் இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்டுள்ளது.

இதனை எனது புத்தகம் கேள்விகள் மற்றும் ஆதாரங்களுடன் விளக்கும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் கேணல் ஹரிகரன், திருச்சி வேலுச்சாமி, திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன், மூத்த ஊடகவியலாளர் பகவான் சிங்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *