மேலும்

மகிந்தவின் மன்னிப்புக்காக ஏங்கி நிற்கும் இந்தியா

Mahinda-Rajapaksa-கொழும்பு மேல் நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரத்தில், சட்டரீதியான  முயற்சிகளை விட, அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கே, சிறிலங்காவுக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியிருந்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா விருப்பம் கொண்டிருந்தாலும், அதுபற்றிய எந்த இறுதி முடிவையும் சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை.

வரும் ஜனவரி மாதம் சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் முடியும் வரை இதுதொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போதைப் பொருள்கடத்தல் விவகாரமாகும்.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க சிறிலங்கா அரசாங்கத்தினால், இயலாதுள்ளதாக பௌத்த பிக்குகளும், ஜாதிக ஹெல உறுமயவும், குற்றம்சாட்டி வருகின்றன.

எனவே, மீனவர்கள் விவகாரத்தில், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே மிகச்சிறந்த தெரிவு என்று சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவோ, சட்டரீதியான வழிமுறைகளை விட, அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைப் பெறும் முயற்சிகளில் இந்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

என்றாலும், பெரும்பாலும், வரும் ஜனவரி 2ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னரே, எந்தவொரு அரசியல் முடிவும் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் இது பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பி விடும்.

இவர்களுடன் மேலும் மூன்று சிறிலங்கா மீனவர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கட்டத்தில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்தால், அது சட்டரீதியான கேள்விகளையும் எழுப்பிவிடும் என்றும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, இந்த தீர்ப்புக்கு எதிராக இந்திய தூதரகத்தின் சார்பில் இன்னமும் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

மேல்முறையீடு செய்வதற்காக அனில் டி சில்வா என்ற சட்டவாளரை இந்தியத் தூதுரகம் நியமித்துள்ளது.

இது கடுமையான வழக்கு என்றும் எனினும், ஜிபிஎஸ் தரவுகளை வைத்து, இதனை நிரூபிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *