குருந்தூர்மலையில் சிறிலங்கா காவல்துறையினரை நிறுத்த முடிவு
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறையினரை மீண்டும் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக புத்தசாசனம, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அங்கு சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்தக் கோரி, குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தலைமைப் பொறுப்பாளர் கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேவையான காவல்துறை பாதுகாப்பை வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, கல்கமுவே சந்தபோதி தேரருக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடங்கியதிலிருந்து அந்த தளத்தில் காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், காவல்துறையினரைத் திரும்பப் பெற்றதால், தொல்பொருள் தளம், அதன் தொல்பொருட்கள் மற்றும் அருகிலுள்ள வனக் காப்பகம் ஆகியவை ஆபத்தில் சிக்கியுள்ளதாக சந்தபோதி தேரர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு குழுக்கள் அவ்வப்போது அந்த இடத்திற்கு வந்து போராட்டங்களையும் பிற நடவடிக்கைகளையும் நடத்தி வருவதாகவும், பொது அமைதியைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
எனவே, அந்த இடத்தில் காவல்துறை பாதுகாப்பை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், கல்கமுவே சந்தபோதி தேரர் புத்தசாசன அமைச்சிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் குருந்தூர் மலை விகாரை வளாகத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் இருப்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க புத்தசாசன அமைச்சகம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
