முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை
நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம், 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, சரண குணவர்தன, அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால். 2022 ஆம் ஆண்டில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணைகளின் முடிவில் குற்றவாளியாக காணப்பட்ட சரண குணவர்த்தனவுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 4ஆண்டுகள் வீதம் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தண்டனைகளை அவர் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும், அதனால் அவர் மொத்தமாக 16 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இந்த நான்கு வழக்குகள் தொடர்பாகவும், சரண குணவர்தனவுக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

