அமெரிக்காவின் கரிசனை குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்ட ஈரான்
சிறிலங்காவுக்கு வெளியே அனைத்துலக கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்கள் நடமாட்டம் குறித்து அமெரிக்கத் தூதரகம் கரிசனை தெரிவித்துள்ளமை தொடர்பாக சிறிலங்கா ஊடகங்கள் மூலமாகவே தாங்கள் அறிந்து கொண்டுள்ளதாக ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அனைத்துலக கடல் பகுதியில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாட்டம் இருப்பது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கவலை தெரிவித்ததாகவும், சிறிலங்கா அதிகாரிகள் இதுகுறித்து அறிந்திருக்கிறார்களா மற்றும் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறார்களா என்று விசாரித்ததாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு, தனிப்பட்ட இராஜதந்திர உரையாடல்களின் உள்ளடக்கம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள ஈரானியத் தூதரகத்திடம், வினவிய போது, சிறிலங்கா ஊடகங்கள் மூலமாகவே, அமெரிக்கா எழுப்பிய கரிசனை குறித்து அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளது.
