அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகள் இரத்மலானவுக்கு வந்தன
அமெரிக்க கடற்படையினால் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்ட, பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்காவை வந்தடைந்துள்ளன.
கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த உலங்குவானூர்திகள் தற்போது, இரத்மலானவில் உள்ள சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், இவை சேவையில் சேர்க்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
இந்த உலங்குவானூர்திகளின் வருகை, சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றும், சிறிலங்கா விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க பங்களிப்பு என்றும் சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த TH-57 ரக உலங்குவானூர்திகள், சிறிலங்கா விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்துவதோடு, பரந்தளவிலான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் திறனையும் மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலங்குவானூர்திகள், முதன்மையாக விமானிப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மற்றும் சிறிலங்கா விமானப்படையால் மேற்கொள்ளப்படும் பிற பொதுச் சேவைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

