செம்மணிப் புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்
இதுவரை 437 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று, வரும் புதன்கிழமை பார்வையிடவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தக் குழுவில், இத்தாலியத் தூதுவர் டாமியானோ பிரான்கோவிக், ஜெர்மனித் தூதுவர் பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்ட் மற்றும் நெதர்லாந்துத் தூதர் வீபே டி போயர் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள், புதைகுழியைப் பார்வையிடுவதற்கு, நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் 21ஆம் நாள் யாழ்ப்பாணம் செல்லும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் இந்தப் பயணத்தின் போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்திக்கவுள்ளனர்.
