மேலும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உடன்பாடு- இந்த மாதம் இறுதியாகும்

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை இந்தியாவினால் நியமிக்கப்பட்ட  அமைப்பு மூலம் நிர்வகிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவைத் தயாரிக்கும் பணி இந்த மாதம் நிறைவடையும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்ட வரைவாளர் எழுப்பிய கவலைகள் குறித்து உள்ளூர் அரச பங்குதாரர்களிடையே கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டப் பிரிவு சில கவலைகளை முன்வைத்திருந்தது. அவற்றை நாங்கள் கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சு, துறைமுக அதிகார சபை  மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களுடன் கலந்துரையாடினோம்.

மேலும், வரைவைப் புதுப்பிக்கும் பணியைத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த வார இறுதிக்குள் அதை நாங்கள் புதுப்பித்துவிட முடியும் என்று நம்புகிறோம்.

பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட வரைவுடன் சட்ட வல்லுநர்களுடன் மீண்டும் கலந்தாலோசித்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வோம்.

இறுதி செய்யப்பட்ட வரைவு பின்னர் இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களுக்காக இராஜதந்திர வழிகள் மூலம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த செயல்முறை மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று வெளிவிவகார அமைச்சின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

உடன்பாட்டு வரைவைப் பற்றி இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், இரு நாடுகளின் பொது அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து, கலந்துரையாடி  என்னென்ன மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.

பின்னர், நாங்கள் புரிந்துணர்வு உடன்பாட்டைப் புதுப்பித்து, சட்டரீதியான பரிசீலனைக்காக மீண்டும் சமர்ப்பிப்போம்.

ஒப்புதல் கிடைத்தவுடன், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக புரிந்துணர்வு உடன்பாட்டை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்,” என்றும் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவினால் உருவாக்கப்பட்ட தற்போதைய முன்மொழிவின்படி, காங்கேசன்துறை துறைமுகம் 30 ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு  அமைப்பினால் நிர்வகிக்கப்படும் என்றும், இதில் துறைமுக அதிகார சபை 51 வீத கட்டுப்பாட்டுப் பங்கையும், மற்ற தரப்பு 49 வீத பங்கையும் கொண்டிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா சுமார் 60 மில்லியன் டொலர் நிதிஉதவியை அறிவித்துள்ள இந்தியா, 30 ஆண்டுகளுக்கு அதனை நிர்வகிப்பதற்கான உரிமையை கோரியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *