மேலும்

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேக நபராக பெயரிட உத்தரவு

கொழும்பு மற்றும் அயல் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமர உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரைக் குற்றஞ்சாட்டப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும் அவரை விடுவிக்கப் பரிந்துரைப்பது  தவறான செயல் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி,  தடுத்து வைத்து, கப்பம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், முன்னர் இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த   அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அதே வழக்கில்  அவரை மீண்டும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக விரிவான வாதங்களை முன்வைத்த சட்டவாளர் அச்சல செனவிரத்னவின் கோரிக்கையை ஏற்று  நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எதிராகத் தெளிவான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருக்கும்போது, ​​அவரது கோரிக்கையை நிராகரிப்பது சாத்தியமில்லை.

சந்தேக நபருக்கு எதிராகப் போதுமான சான்றுகள் இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய சான்றுகள் இருந்தபோதிலும் அவரை விடுவிக்க அறிவுறுத்துவது  தவறான நீதியாகும்.

சுருக்கமற்ற விசாரணையில், ஒரு சந்தேக நபரை விடுவிக்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை.

சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்குகிறார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த உண்மைகளை நீதிபதியின் முன் சமர்ப்பித்தவுடன், நீதிபதி அவற்றை ஆராய்ந்து தனது விருப்பப்படி பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்கிறார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற நீதிபதி கடமைப்பட்டவர் அல்ல.

நீதியை உறுதி செய்வதில் சட்டமா அதிபருக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது.

சான்றுகள் இருந்தபோதிலும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் ஒரு சந்தேக நபரை விடுவிப்பது தவறானது என்றும் நீதிவான் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

அதன்படி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு புதிய குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு, ஜூன் 10 ஆம் நாள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *