திறைசேரி நிதி மோசடி- அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டது
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது குறித்த விசாரணையை விரிவுபடுத்தும் வகையில், சிறிலங்கா புலனாய்வாளர்கள் அமெரிக்காவின் எவ்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் ஊடுருவல் தாக்குதல்களைக் கண்டறிந்து தணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தையும் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
மோசடி மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தன, திறைசேரியிலிருந்து மோசடியாகத் திசை திருப்பப்பட்ட நிதி எங்கே உள்ளது, இந்த மோசடிக்குப் பின்னால் யார் இருந்தனர் என்பதை நாங்கள் இன்னும் அறியவில்லை.
மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இந்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
இந்த விசாரணை ஒரு அனைத்துலக விசாரணையாக மாறியுள்ளது. அவுஸ்ரேலிய அதிகாரிகளும் சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
ஜனவரி மாதத்திலேயே இந்த ஊடுருவல் குறித்து தங்களுக்குத் தெரிந்திருந்ததாக நிதி அமைச்சு ஒப்புக்கொண்ட போதிலும், மார்ச் 28 ஆம் திகதியே நிதி அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகத்தினால், குற்றப் புலனாய்வுப் பிரிவில், முதல் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரே விசாரணைகள் தொடங்கியுள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
