அரச பணியகங்கள், பாடசாலைகளை புதன்கிழமைகளில் மூட சிறிலங்கா அரசு உத்தரவு
எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில், அரச பணியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வார வேலை நாள்களை 4 ஆக குறைக்கும் வகையில், புதன்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்க இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை 2026 மார்ச் 18ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும், நீதித்துறை சேவைகள் மற்றும் அரச கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பயணம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து அரசு நிகழ்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறை நிறுவனங்களும், இதே ஏற்பாட்டைப் பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், சுகாதாரத்துறை, துறைமுகங்கள், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இந்த சிறப்பு விடுமுறையில் சேர்க்கப்படாது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நிலைமையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
