எரிபொருள் விலை 2024ஐ விடக் குறைவு தான் – என்கிறது அரசாங்கம்
உலகளாவிய ரீதியாக எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்துள்ள போதும், சிறிலங்காவில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விடக் குறைவாகவே இருப்பதாக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024 மார்ச்சில் ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய சூழலில், மசகு எண்ணெய் விலை பீப்பாய் 85 டொலராக இருந்தபோது, பெட்ரோல் 92 லிட்டருக்கு 371 ரூபாவாகவும், டீசல் 363 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 262 ரூபாவாகவும் இருந்தது.
தற்போதைய உலகளாவிய நிலைமை மிகவும் சவாலானது. தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய எரிசக்தி விநியோக வழிகளைப் பாதித்து, மசகு எண்ணெய் விலை பீப்பாய் 100 டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமைகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்டதை விட உள்நாட்டு எரிபொருள் விலைகளை சிறிலங்கா குறைவாகவே வைத்திருக்க முடிந்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி நிலையற்ற தன்மையால் உருவாக்கப்பட்ட அழுத்தங்களை அரசாங்கம் புரிந்துகொள்கிறது.
நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிசெய்து நிலைமையை கவனமாக நிர்வகிக்கும் என்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா மேலும் கூறியுள்ளார்.
