மேலும்

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும்  இருவருக்கு எதிராக,  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, சஷீந்திர ராஜபக்ச, செபாலிக சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அரசுத் தரப்பு 30 சாட்சிகளையும் 38 ஆவணங்களையும் சான்றுகளாகப் பட்டியலிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள், அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது சேதமடைந்த சொத்துக்களுக்கு 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டை அங்கீகரிக்குமாறு, இழப்பீடுகளுக்கான பணியகத்துடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு, சந்தேக நபர்கள் அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செவனகல–கிரிப்பன்வெவ பகுதியில் உள்ள மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கட்டடம் உள்ளிட்ட சொத்துக்களுக்கு முன்னர் இழப்பீடு மறுக்கப்பட்டிருந்தது.

முன்னர் நிராகரிக்கப்பட்ட போதிலும், பணம் பெறுவதற்காக அதிகாரப்பூர்வ செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் இது ஊழலுக்கும், ஊழலுக்கு உடந்தையாக இருப்பதற்கும் சமம் என்றும்  இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *