கொழும்பு மாநகரசபையில் என்பிபிக்கு ஆதரவு தேட பணம் கொடுக்கும் வணிகர்கள்
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு, சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, வணிகர்கள் மூலம் நிதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ள சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்களை ஈர்ப்பதற்கு, ஆளும் கட்சியின் சார்பாக, வணிகர்கள் குழு ஒன்று, நிதியளிக்க முன்வந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் சில தொழிலதிபர்கள் பணம் வழங்கியுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டை முழு பொறுப்புடன் முன்வைக்கிறோம் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில், ஐந்து சுயேட்சைக் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சை குழு 1 ஒரு இடத்தையும், சுயேச்சை குழு 2 ஒரு இடத்தையும், சுயேச்சை குழு 3 மூன்று இடங்களையும், சுயேச்சை குழு 4 இரண்டு இடங்களையும், சுயேச்சை குழு 5 இரண்டு இடங்களையும் பெற்றன.
இரண்டு இடங்களைப் பெற்ற சுயேட்சைக் குழு 5, ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.