தமிழ் அரசியல் தலைவர்களை ‘தமிழ் ராஜபக்சக்கள்’ என்கிறார் பிமல் ரத்நாயக்க
பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ராஜபக்சக்களாக மாறியுள்ளனர் என்று சிறிலங்காவின் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு என்பது யாழ்ப்பாணமல்ல, வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி, உள்ளுராட்சித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மன்னார்,வவுனியா உள்ளிட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளோம்.யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் இருக்கிறோம்.
ஏனைய சிங்கள கட்சிகளை விட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை விட, உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்குகள் குறைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் புதியவர்கள். அத்துடன் ஒரு தரப்பினர் எமக்கு எதிராக இனவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டார்கள்.
உள்ளுராட்சித் தேர்தலின்போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சக்களை கண்டோம்.
தமிழ் ராஜபக்சக்கள் தோற்றம் பெறுவார்கள் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. இது கவலைக்குரியது.
வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது முதல் வெற்றியாகும்.வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோம் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.