மேலும்

சிறிலங்கா ஆயுதப்படைகள் மீது தீவிரமான உளவியல் நடவடிக்கைகள்

போரில் வென்ற சிறிலங்காவின் ஆயுதப்படைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உளவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான றியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

33 ஆண்டுகள் சிறிலங்கா கடற்படையில் பணியாற்றிய-  கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான  அவர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊடகங்களில்,  உயிரிழந்த இராணுவ வீரர்களை ‘ரணவிருவோ’ (போர் வீரர்கள்) எனப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ‘சொல்டாடுவோ’ (சிப்பாய்கள்) என்று மாற்றியதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

2030 ஆம் ஆண்டுக்குள் சிறிலங்கா இராணுவத்தின் பலத்தை 100,000 ஆகக் குறைக்க வேண்டும் என்ற முந்தைய அரசாங்கத்தின் பரிந்துரையை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடற்படை மற்றும் விமானப்படையும் மறுசீரமைக்கப்பட வேண்டும். அமைதி காலத்தில் அது நன்றாக இருக்கும்.

சூழ்நிலைகளைப் பொறுத்து வலிமையைக் குறைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும், தொடர்புடைய அனைத்து விடயங்களையும் கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னர், அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

2015 அதிபர் தேர்தலைத் தொடர்ந்து ஆயுதப்படைகள் தொடர்பான, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கருத்து மாறிவிட்டது.

போர் வெற்றியின் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, முதல் ஒருங்கிணைந்த அணிவகுப்பு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டுடு வரை காலி முகத்திடலில் நடத்தப்பட்ட அந்த விழா, பின்னர் மாத்தறைக்கு மாற்றப்பட்டது.

2015 இல் நல்லாட்சி அரசாங்கம் வெற்றி நாள் அணிவகுப்பை அதன் பின்னர் வெற்றி நாள் அணிவகுப்பு நடத்தப்படவில்லை.

பத்தரமுல்லையில் சிறிலங்காவில் பயங்கரவாதம் வெற்றி கொள்ளப்பட்டதை குறிக்கும் வகையில் மே 19 அன்று நடைபெற்ற நிகழ்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஏன் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆரம்பத்தில் முடிவு செய்தார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.

சிறிலங்கா அதிபர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று மே 16 ஆம் திகதி, பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.ஆனால் மே 18 ஆம் திகதி அவர் தனது மனதை மாற்றிக்கொண்டார்.

நாட்டிற்கு சேவை செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவராக இருக்கிறேன்.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் 2017 ஜூலையில் கைது செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ஒரு வெளிநாட்டுப் பணியில் இருந்து திரும்பி அழைக்கப்பட்டிருந்தேன்.

2009 மே மாதம் போர் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், பல்வேற தரப்பினரால் பரப்பப்பட்ட ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, எந்த அரசாங்கமும் உண்மையான முயற்சியை எடுக்கவில்லை.

ஆயுதப்படைகளின் தலைமையில் இருந்தவர்களும் இந்த பரிதாபகரமான சூழ்நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட  பொறுப்புக்கூறல் தீர்மானத்தை ஆதரித்தது.

இறுதிக்கட்டப் போரின் போது. கடற்படைத் தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவின் உத்தரவின் பேரில், முல்லைத்தீவு கடல் போது, ​​ நடவடிக்கைக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தேன்.

இந்த முற்றுகை 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான படகுகளை உள்ளடக்கியது.

அந்த முற்றுகை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய போராளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.

விடுதலைப் புலிகளின் இராணுவத் திறன் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றத்திலும் வெளியிலும் உள்ளவர்கள் கூட்டாட்சியைப் பாதுகாப்பதில் நம்பிக்கையுடன் இருந்தனர்.

வெளிநாட்டு சக்திகள் தங்கள் உத்திகளை அடைவதற்காக, இங்கு அரசாங்கங்களை மாற்றத் தயங்க மாட்டாது.

பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையை எமது தலைவர்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

நாட்டின் ஒற்றையாட்சி நிலையைப் பாதுகாக்க ஆயுதப்படைகள் செய்த மகத்தான தியாகங்களை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *