சிறிலங்காவில் 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமாக பரவும் சிக்குன்குனியா
சிறிலங்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, சிக்குன்குனியா தொற்று நோய், வேகமாகப் பரவி வருவதாக, முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.
அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலியை ஏற்படுத்தும், நுளம்புகளால் பரவும் இந்த வைரஸ் நோய், நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள, மருத்துவர் நீலிகா மாளவிகே, தற்போதைய பரவலுக்குக் காரணமான வைரஸ் திரிபை பகுப்பாய்வு செய்ய, தனது ஆராய்ச்சிக் குழு முழு மரபணு வரிசைமுறையை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பகுப்பாய்வு, புதிய வைரஸ் அறிமுகத்தால் ஏற்பட்டதா அல்லது நாட்டில் முன்னர் பரவிய பழைய திரிபின் மீள் எழுச்சியால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய உதவும்.
அதேவேளை, சிக்குன்குனியா மற்றும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொசுக்கள் பெருகும் இடங்களை, குறிப்பாக தேங்கி நிற்கும் நீர் ஆதாரங்களை அகற்றவும், மேலும் பரவுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
சிக்குன்குனியா மற்றும் டெங்கு பரவலை முன்னிறுத்தி அமெரிக்காவும் பிரித்தானியாவும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டவர்களுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.