இனப்படுகொலை கருத்தை ஊக்குவிப்போர் மீது நடவடிக்கை- சிறிலங்கா எச்சரிக்கை
போரின் போது சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற கருத்தை ஊக்குவிக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் அவர், கனடிய பிரதமர் மார்க் கார்னியின் அண்மைய கருத்துக்கள் உட்பட, தமிழ் இனப்படுகொலை குறித்த சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கருத்துக்களை வன்மையாக மறுத்துள்ளார்.
எமது நாட்டில் இனப்படுகொலை நடந்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இனப்படுகொலை என்பது, சிறிலங்கா ஆயுதப் படைகள் தமிழ் மக்களை வேண்டுமென்றே குறிவைத்து கொல்வதைக் குறிக்கிறது. இது ஒருபோதும் நடக்கவில்லை என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் மற்றும் கொடிகளைக் காட்சிப்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டங்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
மீறல்கள் எங்கு நடந்தாலும் அந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
எதிர்காலத்தில், ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படும் இடங்களிலும் அவ்வாறே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.