சுற்றுலாப் பயணிகள் வருகை – இன்று மில்லியனை தொடுகிறது சிறிலங்கா
சிறிலங்கா சுற்றுலாத்துறை இன்று இந்த ஆண்டின் ஒரு மில்லியனாவது சுற்றுலாப் பயணியை வரவேற்க உள்ளது.கட ந்த ஆண்டில், சிறிலங்கா ஜூன் மாத இறுதியிலேயே இந்த மைல்கல்லை எட்டியது.
சிறிலங்கா இந்த ஆண்டு மே மாதத்தின் முதல் 21 நாட்களில் 91,785 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, இன்று வரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 என்ற கட்டத்தை எட்டியுள்ளது.
4,370 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் போது, இன்று ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற மைல்கல்லை கடக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரியில், 252,761 சுற்றுலாப் பயணிகள் வந்த போதும், 2025 இல் எதிர்பார்க்கப்பட்ட கணிப்பை விட 52,926 குறைவாகும்.
அதேநேரத்தில் பிப்ரவரியில் 240,217 சுற்றுலாப் பயணிகள் வந்த போதும், எதிர்பார்க்கப்பட்ட கணிப்பை விட 70,720 குறைவாகவே இருந்தது.
மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த போதும், அது இலக்கை விட 73,505 பேர் குறைவாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் 174,608 பார்வையாளர்கள் வந்துள்ள நிலையில், கணிக்கப்பட்டதை விட, 50,102 பேர் குறைவாகவே உள்ளனர்.
மே மாதத்திற்கு 165,118 சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டும் என்ற இலக்கை சுற்றுலாத்துறை நிர்ணயித்திருந்தாலும், முதல் 21 நாட்களில் 91,785 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
10 நாட்களில் மேலும் 73,333 பேர் வருகை தர வேண்டும். தற்போதைய போக்குகளின் அடிப்படையில் இந்த இலக்கை அடைவது கடினம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், மே மாதம், 130,000 க்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகைகளுடன் முடிவடையும்.
பருவகாலம் இல்லாத காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வாக்குறுதி அளிக்கப்பட்ட உலகளாவிய சந்தைப்படுத்தல் பரப்புரை மற்றும் இலவச நுழைவிசைவு கொள்கையை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியதால் இந்த நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 5 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட சிறிலங்கா திட்டமிட்டிருந்தது.