காணி விவகாரம்: வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹரிணி அழைப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய வரும் வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு அழைத்துள்ளார்.
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணிகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்புக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
அதனை ரத்துச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இத்கு எதிராக வரும் 29ஆம் திகதி பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்புக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நாடாளுமன்றத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
