சிப்பாய்கள் என அழைத்து இராணுவத்தினரை கேவலப்படுத்தி விட்டார் அனுர
களத்தில் போராடியவர்களை சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தினரை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
புலிப் பிரிவினைவாதிகள் கோபித்துக் கொள்வர் என்ற அச்சத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்க தேசிய போர் வீரர் நிகழ்வினை புறக்கணிப்பதற்கு திட்டமிட்டிருந்தார்.
தேசப்பற்றாளர்களான நாட்டு மக்களின் எதிர்ப்பை அடுத்து, விருப்பமின்றி அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போது, இராணுவ வீரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் இருக்க முயற்சித்துள்ளார்.
இது மணமகள் இன்றி திருமணம் நடத்துவதைப் போன்றதாகும். இராணுவ வீரர்களை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம்.
சிறிலங்கா அதிபர், இராணுவ வீரர்களை, இராணுவ சிப்பாய்கள் என்றே குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் அனைவரும் சிப்பாய்கள் என்ற போதிலும், அனைத்து சிப்பாய்களும் இராணுவ வீரர்கள் அல்ல.
போர்முனையில் நேரடியாகப் போராடியவர்களே இராணுவ வீரர்கள். ஆனால் சிறிலங்கா அதிபர் அனைவரையும், சிப்பாய்கள் என அழைத்து அவமதித்திருக்கிறார்.
இராணுவத்தினரால் தான் போர் ஏற்பட்டது என்பதைப் போலவே அவரது உரை அமைந்திருந்தது.
போரின் அபாயத்தை இராணுவத்தினருக்கு புதிதாகக் கற்பிக்க வேண்டியதில்லை. என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.