சபைகளில் ஆட்சியமைக்க முனையும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறார் அனுர
தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீறி, உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளூராட்சி சபையின் ஆட்சியும், மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் நின்று பிடிக்க முடியாது என, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஜேவிபியின், 60வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, எதிர்க்கட்சிகள் அபகரிக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட கூடாது.
267 உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் 152 உள்ளூராட்சி சபைகளிலும், அடுத்து, 115 உள்ளூராட்சி சபைகளில் கூடிய விரைவிலும் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளோம்.
ஆட்சி செய்வதற்கான ஆணையை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை.
பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்படும் எந்தவொரு சபையும், மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
