கனடிய தூதுவரை அழைத்து சிறிலங்கா அமைச்சர் கண்டனம்
கனடாவின் பிராம்ப்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம், அமைக்கப்பட்டதற்கு, கொழும்பில் உள்ள கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று காலை, கொழும்பில் உள்ள கனடிய தூதுவரை அழைத்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் நினைவுச்சின்னத்தை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கும், குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, அவர்,
சிறிலங்காவில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அமைப்பினாலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்தப் பொய்யான கதையை சிறிலங்கா உறுதியாக நிராகரிக்கிறது .
இது முக்கியமாக, கனடாவிற்குள் தேர்தல் ஆதாயங்களுக்காகப் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கம் சிறிலங்காவில் இனப்படுகொலை நடந்ததாக எந்தக் கண்டறிவையும் செய்யவில்லை என்பதை, 2021 ஏப்ரல் மாதம், கனடிய வெளியுறவு அமைச்சு, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
அதைவிட, கனடா 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகளைஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இதனை மீண்டும் உறுதிப்படுத்தியது.
பிராம்ப்டனில் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படும் ஒரு கட்டுமானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் பலமுறை தனது கடுமையான ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியுள்ளது.
பிராம்ப்டன் நகர சபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை சிறிலங்காதொடர்ந்து வலியுறுத்துகிறது என்றும், விஜித ஹேரத் கனடியத் தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

