பட்டலந்த அறிக்கையை ஆராய குழுவை நியமிக்கவுள்ளார் சட்டமா அதிபர்
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்வதற்கான குழுவொன்று சட்டமா அதிபரினால் நியமிக்கப்படவுள்ளது.
பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக, 25 ஆண்டுகளிற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை நீண்டகாலம் கிடப்பில் கிடந்தது.
அண்மையில் அந்த அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடமும், சிறிலங்கா காவல்துறையிடமும் மேலதிக நடவடிக்கைக்காக சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் கையளித்திருந்தது.
ஏற்கனவே, சிறிலங்கா காவல்துறை இந்த அறிக்கையை ஆராய்வதற்கு ஐந்து உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவையும், உப குழுக்களையும் அமைத்துள்ளது.
இந்த நிலையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆராய தீர்மானித்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம், அதற்கென மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கவுள்ளது.
அந்தக் குழு, விசாரணை அறிக்கையின் கண்டறிவுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
