சித்திரவதைகள் தடுப்பில் ஏழு ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை – ஐ.நா உபகுழு குற்றச்சாட்டு
சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சித்திரவதை மற்றும் கொடுமைகளின் தொடர்ச்சியான ஆபத்துகளை கையாள்வதற்கு, சிறிலங்கா தனது தேசிய தடுப்புப் பொறிமுறையை வலுப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு மேற்கொண்ட தனது இரண்டாவது அதிகாரபூர்வ பயணத்தைத் தொடர்ந்து அந்தக் குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
விசாரணைக்கு முந்தைய நீண்டகால தடுப்புக்காவல், தடுப்புக்காவல் வசதிகள் மற்றும் தனிநபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள பிற இடங்களில் நிலவும் நெரிசல் மற்றும் போதுமான வசதியற்ற நிலைமைகள் குறித்தும் ஐ.நா உபகுழு கவலை தெரிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில் மேற்கொண்ட தமது முதலாவது பயணத்திற்குப் பின்னர் செய்யப்பட்ட பல பரிந்துரைகள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.
“எங்களின் முதல் பயணம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும், எங்களின் முந்தைய பல பரிந்துரைகள் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை, மேலும் சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்கள் தங்கள் சூழ்நிலையில் எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இன்னும் காணவில்லை,” என்று சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவிற்குத் தலைமை தாங்கிய ஆயிஷா ஷுஜுன் முஹம்மட் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு பயணத்திற்குப் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, ஐ.நா உபகுழு 2026 ஜூன் 14 ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் வரை சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.
இந்தக்குழு, நாட்டின் தேசிய தடுப்புப் பொறிமுறையுடன் நேரடியாக ஈடுபடவும், கைதிகள் நடத்தப்படும் விதத்தையும், சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதிப்பிடவும் முயன்றது.
இந்தப் பயணத்தின் போது, ஐ.நா உபகுழுவின் உறுப்பினர்கள் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், விளக்கமறியல் மையங்கள், புனர்வாழ்வு மையங்கள் மற்றும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கும் பிற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்புக்காவல் வசதிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தக்குழுவினர் அரசாங்க அதிகாரிகள், தேசிய தடுப்புப் பொறிமுறையின் உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பிற ஐ.நா முகமைகளையும் சந்தித்தனர்.
கைதிகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டத்தில் இருந்தபோதிலும், நடைமுறையில் சீராகச் செயற்படுவதில்லை என்றும், ஒரு சுதந்திரமான புலனாய்வு அமைப்பு இல்லாதது தண்டனையின்மைச் சூழலுக்கு வழிவகுக்கிறது என்றும் சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவினர் தெரிவித்தனர்.
சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கு, சுதந்திரமான, போதுமான வளங்களைக் கொண்ட மற்றும் திறம்பட செயல்படும் ஒரு தேசிய தடுப்பு அமைப்பு அவசியம் என்று, குழுவின் தலைவரான ஆயிஷா ஷுஜுன் முகமட் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அமைப்பை வலுப்படுத்த மேலும் உறுதியான நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் கூறினார்.
மேலும், விருப்ப நெறிமுறையின் கீழ் உள்ள கடமைகள், ஒரு மேற்பார்வைக் குழுவை முறையாக நியமிப்பதையும் தாண்டி, அதன் தொடர்ச்சியான சுதந்திரம், செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதையும் உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறப்பு கண்காணிப்புக் குழு தனது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை விவரிக்கும் ஒரு இரகசிய அறிக்கையை சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, சிறிலங்கா அரசாங்கம் அதனைப் பகிரங்கப்படுத்த முடிவு செய்யும் வரை, அந்த அறிக்கை இரகசியமாகவே இருக்கும்.
வரவிருக்கும் அறிக்கையையும், அதன் முந்தைய பயணத்தின் அறிக்கையையும் வெளியிடுமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா உபகுழு வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு செய்வது, சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொது விவாதத்தை ஊக்குவிக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தூதுக்குழுவில், மாலைதீவைச் சேர்ந்த ஆயிஷா ஷுஜுன் முஹம்மட், போலந்தைச் சேர்ந்த ஜாகப் ஜூலியன் செபெக், ஜேர்ஜியாவைச் சேர்ந்த நிகா க்வராட்ஸ்கெலியா, குரோஷியாவைச் சேர்ந்த அனிகா டோம்சிக் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை சேர்ந்த இரண்டு மனித உரிமை அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
