இராணுவத் தடுப்பு மையங்களில் இடம்பெறும் சித்திரவதைகள்- ஐ.நா குழுவிடம் அறிக்கை.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் மையங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சித்திரவதை, நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகள் குறித்து, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவிடம் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள், குறிப்பாக வெலிசர கடற்படை முகாம், பூசா சிறை மற்றும் முல்லைத்தீவு குடிவரவு தடுப்பு முகாம் (விமானப்படை) ஆகியவற்றில் சிறைகள் செயல்படுவது முக்கிய கவலையாக உள்ளது.
இந்தத் தடுப்பு மையங்கள் சிறப்பு அதிரடிப்படை , விமானப்படை மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இங்கு சித்திரவதையின் அறிகுறிகளை மறைப்பதற்காக, பார்வையிட வரும் தரப்பினரிடமிருந்து தாங்கள் வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இங்குள்ள கைதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், கைதிகளைச் சந்திக்க வரும் பெண் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல், கேள்வி கேட்டல், பின்தொடர்தல் மற்றும் அச்சுறுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டுடன் பூசா சிறைக்குள்ளிருந்தே கொலைகள் திட்டமிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
பூசா மற்றும் வெலிசர சிறைகளுக்குள் நுழையும்போது சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் கைதிகள் கடுமையான சோதனைகளை எதிர்கொள்கின்றனர்.
கைதிகள் தங்களின் தனியுரிமை மற்றும் மனித மாண்புக்கான உரிமைகளில் கடுமையான மீறல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
முறையான மருத்துவ மேற்பார்வை அல்லது நியாயப்படுத்தல் இன்றி, சில சிறைகளில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் உட்பட மருத்துவப் பணியாளர்கள் அல்லாதவர்களால் உடல் உள்ளுறுப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த அத்துமீறும் நடைமுறைகள், சிறை அறைகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளில் அடிக்கடி நடத்தப்படும் தேவையற்ற சோதனைகள், தொடர்ச்சியான கண்காணிப்பு, 24 மணி நேர மூடிய-சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு, மற்றும் கதவுகளற்ற கழிப்பறைகள் ஆகியவை கைதிகளுக்கு எந்தவொரு தனிப்பட்ட தனியுரிமையையும் அளிக்காமல் செய்கின்றன.
இந்த தடுப்புக்காவல் மையங்களுக்கு முன்னறிவிப்பின்றி திடீர் பயணத்தை மேற்கொள்ளுமாறும், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
