ஹெய்டிக்கு 900 சிறிலங்கா படையினரை அனுப்புவதற்கே ஐ.நா அனுமதி
ஹெய்டியில் நிறுத்தப்படும் ஐ.நாவின் கும்பல் அடக்கும் படைப்பிரிவில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 900 பேரை இணைத்துக் கொள்வதற்கு ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் இந்த அனுமதியைத் தொடர்ந்து, ஹெய்டிக்கு அனுப்புவதற்காக, சுமார் 900 படையினரைக் கொண்ட ஒரு படைப்பிரிவிற்கு, சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வுடனான கலந்தாலோசனைகள் மற்றும் அமைச்சுக்களுக்கிடையேயான குழுவின் பணிகளைத் தொடர்ந்து, சிறிலங்கா படையினரை தேர்ந்தெடுத்து இந்த மாத இறுதிக்குள் ஹெய்டிக்கு அனுப்பும் தேர்வு செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்படும் படையினர், மீது மனித உரிமை மீறல்கள் அல்லது பிற குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதே இந்தத் தேர்வு செயல்முறையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், ஹெய்டிக்கு ஐ.நா அமைதி காக்கும் படையினரை அனுப்பும் வாய்ப்பு சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளது.
ஹெய்டியில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய பின்னர், 2015ஆம் ஆண்டில் சிறிலங்கா தனது செயற்பாடுகளை முடித்துக் கொண்டது.
2004 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 16,000-க்கும் மேற்பட்டசிறிலங்கா இராணுவத்தினர் ஹெய்டியில் பணியாற்றிருந்ததுடன், அங்கு நடவடிக்கைகளின் போது 6 சிறிலங்கா படையினர் உயிரிழந்து, மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
