மாகாண சபை தேர்தலுக்கு நிதி பிரச்சினையல்ல- என்கிறார் அமைச்சரவை பேச்சாளர்
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதி தொடர்பாக எந்த பிரச்சினைகளும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டு விட்டதாகவும், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவு குறித்த ஊடக சந்திப்பில், கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“இந்த அரசாங்கம் எட்டு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொண்டு இந்த மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதே எங்கள் நோக்கம்.
இந்த விடயத்தில் நிதி தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தலுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டாலும், துணை மதிப்பீட்டின் மூலம் அதனை ஒதுக்கீடு செய்ய முடியும்.
மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாலும், சட்ட விதிகளில் ஒரு சிக்கல் உள்ளது.
இதைத் தீர்ப்பதற்காக ஒரு நாடாளுமன்றக் குழு தற்போது செயற்பட்டு வருகிறது, மேலும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
தேவையான சட்டக் கட்டமைப்பு அமைக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் எங்களால் நடத்த முடியும்.என்றும் தெரிவித்துள்ளார்.
