அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் திருகோணமலை வந்தது
அமெரிக்கக் கடலோரக் காவல்படையினால் சிறிலங்காவிற்கு கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘டெசிசிவ்’ (DECISIVE) மூன்று மாதக் கடல் பயணத்திற்குப் பின்னர், திருகோணமலையை வந்தடைந்துள்ளது.
அமெரிக்காவினால் சிறிலங்கா கடற்படைக்கு கொடையாகக வழங்கப்பட்ட இந்தக் கப்பல், 2025 டிசம்பர் 02 ஆம் நாள், பால்டிமோரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, பால்டிமோர் அமெரிக்கக் கடலோரக் காவல்படைத் தளத்தின் இறங்குதுறையிலிருந்து 2026 பிப்ரவரி 20 ஆம் நாள் சிறிலங்கா நோக்கிய பயணத்தைத் தொடங்கியது.
இந்தக் கப்பல், சுமார் 14,775 கடல் மைல்களைக் கடந்து, திருகோணமலை கடற்படைத் தளத்தை அடைந்துள்ளது.
இந்தப் பயணம், சிறிலங்கா கடற்படைக் கப்பல் ஒன்று மேற்கொண்ட மிக நீண்ட ஒற்றைக் கடல் பயணமாகும்.
சிறிலங்கா கடற்படைக் கப்பல், பனாமா கால்வாய் வழியாகப் பயணித்த முதல் நிகழ்வும் இதுவே ஆகும்.
அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் முன்னாள் கப்பலான ‘டெசிசிவ்’, 64 மீட்டர் நீளம் கொண்டது.
100 பணியாளர்களுடன், 6000 கடல் மைல்கள் வரை பயணம் செய்யும் திறனுடையது.
கப்டன் கயன் விக்ரமசூரியவின் தலைமையில், 14 அதிகாரிகள் மற்றும் 72 மாலுமிகள் என 86 சிறிலங்கா கடற்படையினர் இந்தக் கப்பலை சிறிலங்காவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்தக் கப்பல் அதிகாரபூர்வ சேவைத் தொடக்க விழாவிற்காக அடுத்த வாரம் கொழும்புக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத், தெரிவித்துள்ளார்.
