மேலும்

இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு

எதிர்காலத்தில் இணையவழித் திருட்டு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கும் விடயத்தில் ஒத்துழைப்பது குறித்து சிறிலங்காவும்,  இந்தியாவும்  பேச்சுக்களைத்  தொடங்கியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே அதிகார மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், சிறிலங்காவின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளைப் பொறுத்து, எதிர்கால ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாம் எவ்வாறு சிறந்த முறையில் ஒத்துழைக்க முடியும் என்பதை ஆராய்வதே முன்மொழியப்பட்ட இந்த முயற்சியாகும் என்று இந்த செயல்முறை பற்றி அறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பை ஊடுருவிய இணைய ஊடுருவிகள்,  அவுஸ்ரேலியாவிற்கு  செலுத்த வேண்டிய கடன் சேவையின் ஒரு பகுதியாக பத்து முறை செய்யப்பட்ட கொடுப்பனவுகளான, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை  திருடியிருந்தனர்.

இதையடுத்து, அமெரிக்க அஞ்சல் சேவைக்குச் செலுத்தப்பட்ட மேலும் 625,000 அமெரிக்க டொலர்களும் இதுபோன்று திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்குகளை விசாரிக்க அமெரிக்காவின் சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு (FBI), அவுஸ்ரேலிய காவல்துறை என்பன சிறிலங்காவிற்கு உதவி வருகின்றன.

எனினும், இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையே தற்போது தொடங்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு  முயற்சிகள், இந்த இரண்டு இணையவழித் திருட்டு வழக்குகள் தொடர்பான  கூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *