பாகிஸ்தான் – சிறிலங்கா சிறப்புப் படைகளின் ‘கைகுலுக்கல்-II’ பயிற்சி ஆரம்பம்
பாகிஸ்தான் – சிறிலங்கா இருதரப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியான ‘கைகுலுக்கல்-II’ (Shake Hands-II), பாகிஸ்தானின் தர்பேலாவில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வார கால இந்தப் பயிற்சியில், பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புச் சேவைக் குழு (SSG) மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைகளின் பங்கேற்கின்றன.
இந்த கூட்டுப் பயிற்சிகள் தொழில்முறை இராணுவத் திறன்களை மேம்படுத்துவதையும், இரு நட்பு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் படைகள், ஒருங்கிணைப்பு, செயல்பாட்டுத் திறன் மற்றும் பரஸ்பரப் புரிதலை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சிகளில் ஈடுபடும்.
இது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரு தரப்பினரும் தங்கள் செயல்பாட்டு அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்கும்.
வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கும், நவீன பாதுகாப்புச் சவால்களுக்கு எதிரான மேம்பட்ட தயார்நிலைக்கும் இது பங்களிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

