மேலும்

இணைய ஊடுருவிகளிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும்  திறைசேரிக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது, மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களை இணைய ஊடுருவிகள் இடைமறித்து மாற்றியமைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவு தொடர்பாகவும், இதேபோன்ற முறையில் மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்ள இணைய ஊடுருவிகள் முயற்சித்துள்ளனர்.

இதன்போது வங்கி கணக்கு இலக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து இந்த பாரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா காவல்துறையின் கணினி குற்ற விசாரணை பிரிவு மற்றும் கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு  உடனடியாக அறிவிக்கப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் மீள்செலுத்துகை தொடர்பான ஆரம்பக்கட்ட தொடர்புகள் வரை விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதில், அவுஸ்ரேலியாவிற்கு செல்ல வேண்டிய நிதி ஊடுருவிகள் கணக்குகளுக்கு திசைதிருப்பப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு பிரதி திறைசேரி செயலாளர்கள் உள்ளடங்கிய உள்வாரி குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரையின் பேரில், தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு மிகவும் நுணுக்கமான மற்றும் உணர்திறன் மிக்க விடயம் என்பதால், ஊடகங்கள் மூலம் அதிக விபரங்களை வெளியிடுவது குற்றவாளிகள் தப்பிச் செல்ல வழிவகுக்கும்.

குற்றவாளிகளை கைது செய்வதும், திருடப்பட்ட நிதியை மீளப் பெறுவதுமே எமது முன்னுரிமை.

அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, இந்த விசாரணைகள் துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேலதிக விபரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *