திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது ஈரானிய கப்பல்
ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஈரானின் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் சிறிலங்கா கடற்படையால் பொறுப்பேற்கப்பட்டதுடன், அதிலிருந்த கடற்படையினர் இறக்கப்பட்டு வெலிசற கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பல வாரங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தரித்து நின்ற இந்தக் கப்பல் தனியார் நிறுவனம் ஒன்றின் இழுவைப் படகு மூலம், திருகோணமலைக்கு கொண்டு செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஈரானிய கப்பர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தக் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, 8 தொடக்கம் 10 வரையான ஈரானிய மாலுமிகள் கப்பலில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தக் கப்பலில் இருந்த மற்றும் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மொத்தம் 236 ஈரானிய மாலுமிகள் நேற்று முன்தினம் இரவு ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
