ரஷ்யா மீதான தடைக்கு விலக்கு கோரிய சிறிலங்கா – இன்னமும் பதிலளிக்காத அமெரிக்கா
ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து, இந்த தடையை ஒரு மாத காலத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்காலிகமாக நீக்கியிருந்தார்.
இந்தநிலையில், எரிபொருளை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா, ரஷ்யாவின் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிறிலங்கா வந்திருந்த த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், அமெரிக்காவிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த தடைகளில் இருந்து அதிபர் ட்ரம்ப், 30 நாள்கள் விலக்கு அளித்திருந்தார்.
இந்த விலக்கு ஏப்ரல் 11 ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில், இது நீடிக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
குறைந்தபட்சம் மூன்று மாத விலக்கிற்கான உத்தரவாதம் இல்லாமல் ரஷ்ய எரிபொருள் கொள்முதல் ஒப்பந்தத்தை முன்னெடுக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
