சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அடுத்த மாதம் ரஷ்யா பயணம்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து ரஷ்யாவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்கே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மொஸ்கோவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ மற்றும் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்காவின் அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இதன்போது, சிறிலங்காவின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக ரஷ்ய அமைச்சர்கள் உறுதியளித்த போதும், நீண்ட கால அடிப்படையில் உடன்பாடுகளை செய்வதற்கு வலியுறுத்தியிருந்தனர்.
நீண்டகால உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு சிறிலங்கா தயக்கம் காட்டி வரும் நிலையில், மேலதிக பேச்சுக்களை நடத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மொஸ்கோவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
