மேலும்

அமெரிக்க தூதுவரின் வருகையும் சீனத் தூதுவரின் பரிசளிப்பும்

கடந்த பிப்ரவரியில், தெற்காசியா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழு நடத்திய கலந்துரையாடலின் போது, ​​குழுவின் தலைவர் பில் ஹுய்ஸெங்கா (Bill Huizenga), சிறிலங்காவும் மாலைதீவும் உலகப் பொருளாதாரத்திற்கும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கும் எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துரைத்தார்.

அவருக்குப் பதிலளித்த, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர், சிறிலங்காவும் மாலைதீவும் சிறிய கடல் நாடுகளாக இருந்த போதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் இடங்களில் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.

பின்னர் தலைவர் ஹுய்ஸெங்கா, உலகின் 75 சதவீத எண்ணெய் ஏற்றுமதிகள் சிறிலங்காவின் தெற்குக் கடற்கரையிலிருந்து சில மைல் தொலைவிற்குள் செல்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.

உலகின் கொள்கலன் போக்குவரத்தில் கிட்டத்தட்ட பாதி இதே கடல்வழிப் பாதையில் செல்வதால், இந்த நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய மையங்களாக விளங்குகின்றன என்றும் கபூர் மேலும் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் பேசப்பட்டது.

அந்த துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்குக் குத்தகைக்கு விடும் முடிவைத் தொடர்ந்து, சீனாவின் செல்வாக்கினால் சிறிலங்காவின் செயல்பாட்டுச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கபூர் வாதிட்டார்.

கபூரின் இலங்கைப் பயணத்தை இந்த பரந்த பின்னணியில் பார்க்க வேண்டும்.

அவர் வருவதற்கு முன்னர் அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் சிறிலங்காவுக்கு வருகை தந்தார்.

ஷ்னைடரின் வருகை, சிறிலங்கா-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மை வலுவடைந்து வருவதைப் பிரதிபலிப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.

ஷ்னைடரின் வருகையின் போது கபூரின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஆழமடைந்து விரிவடைந்து வருவதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த வாரம், துறைமுகங்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது, ​​மத்திய கிழக்கில் நிலவும் மோதல் கொழும்பு துறைமுகத்தின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாக உலக வங்கியின் சிறிலங்கா முகாமையாளர்  குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவரும், அதிபர் ட்ரம்பின் சிறப்புப் பிரதிநிதியுமான செர்ஜியோ கோர், சிறிலங்காவுக்கு வருகை தந்து கொழும்பு துறைமுகத்தை ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், இந்த வாரம் சிறிலங்காவுக்கு வந்த கபூர், துறைமுகத்திற்கு இதேபோன்ற ஒரு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பசுபிக் விமானப்படைத் தளபதி மற்றும் கபூர் வருகைக்கு முன்னர், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்திற்கு  சென்று, ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ​​சீன அதிபர் ஷி ஜின்பிங் எழுதிய ‘சீனாவின் ஆளுகை’ நூலின் ஐந்தாம் பாகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை  சீனத் தூதுவர் அவருக்கு வழங்கினார்.

முன்னதாக, சீனாவிற்குச் சென்று திரும்பிய பின்னர், ரில்வின் சில்வா சீனாவின் ஆட்சி முறையைப் பாராட்டிப் பேசினார்.

மேலும், தான் சந்தித்த சீன அதிகாரிகள், சிறிலங்காவும் அதுபோன்ற ஒரு ஆட்சி முறையைக் கடைப்பிடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைத் தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

கபூரின் வருகைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

ஆங்கில மூலம்- உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்- மவ்ரட்ட நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *