போர் விமானங்களுக்கு சிறிலங்கா அனுமதி மறுப்பு – அமெரிக்க தூதரகம் நழுவல்
அமெரிக்க போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்தது தொடர்பான கேள்விக்கு,கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிப்பதை தவிர்த்துள்ளது.
மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படையின் இரண்டு போர் விமானங்களை தரையிறக்க அனுமதி கோரப்பட்ட போதும், தனது அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அமெரிக்காவும் சிறிலங்காவும் வெளிப்படைத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையைப் பேணி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒப்பரேசன் எபிக் பியூரி உள்ளிட்ட நடவடிக்கை நகர்வுகள் தொடர்பாக, வொஷிங்டனில் உள்ள போர் திணைக்களத்திடம் தான், கேட்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
