மேலும்

மின்சார சிக்கனத்தை தீவிரப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உச்ச பயன்பாட்டு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த பரப்புரையை தீவிரப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர்  செயலகத்தில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், தேவை உச்சத்தில் இருக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலகட்டத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறுஅறிவுறுத்தியுள்ளார்.

மின்சாரச் சேமிப்பின் மீதான இந்த புதிய கவனம், உலகளாவிய எரிசக்தி சந்தையின் நிலையற்ற தன்மை குறித்த அதிகரித்து வரும் கவலையையும், உள்நாட்டுத் தேவையை கவனமாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதிபலிக்கிறது.

அதே நேரத்தில், மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்தும் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய உலகளாவிய சூழலில் தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதற்கு, அரச நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் கூட்டுப் பொறுப்பு தேவை என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், எரிசக்தி நுகர்வை நிர்வகிப்பதற்காக அண்மைய வாரங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன்,  குறிப்பாக பொதுத்துறையில் கூடுதல் நடவடிக்கைகளைச் செயற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

உச்ச நேரத்தில் அரசாங்க நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய தெளிவான மற்றும் நடைமுறைக்கு உகந்த வழிகாட்டுதல்களை வகுக்குமாறும் சிறிலங்கா அதிபர்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆற்றல் சேமிப்பு முயற்சிகள் மத்திய நிர்வாகத்தைத் தாண்டியும் விரிவடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரப் பலகைகள் மற்றும் அலங்கார விளக்கு அமைப்புகளுக்கு கணிசமான அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டதுடன், அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க மின் சேமிப்பை அடைய முடியும் என்றும்  தெரிவித்தனர்.

நகர்ப்புறங்களில் அத்தியாவசியமற்ற தெருவிளக்குகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்மொழிவுகளும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

இதையடுத்து, சாத்தியமான மாற்று வழிகளைக் கண்டறிந்து, அவற்றை விரைவாகச் செயற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கட்டாய விநியோகக் கட்டுப்பாடுகளை விட, தேவை சார்ந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *