சர்வதேச தரத்துடன் விசாரணைகள் நடக்க வேண்டும் – அனுசரணை நாடுகள்
மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவது முக்கியம் என்று சிறிலங்கா குறித்த அனுசரணை நாடுகளின் குழு வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில், நேற்று அனுரசணை நாடுகள் குழுவின் சார்பில் பிரித்தானியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி குமார் ஐயர் அறிக்கை உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா, மலாவி, மொன்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சிறிலங்கா அனுசரணைக்கு குழுவின் சார்பாக, அமைச்சர் விஜித ஹேரத்தின் வருகைக்கு நன்றி கூறுகிறோம்.
மனித உரிமைகள் ஆணையாளரே, நீடித்த சவால்கள் மற்றும் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகள் இரண்டையும் அடிக்கோடிட்டுக் காட்டிய உங்கள் அறிக்கை மற்றும் அண்மைய பயணத்திற்கு எமது நன்றிகள்.
சட்டவிரோத கொலைகள், கட்டாயமாக காணாமல் போதல்கள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை உங்கள் அலுவலகம் முன்னர் ஆவணப்படுத்தியுள்ளது.
நீங்கள் குறிப்பிட்டது போல, சிறிலங்கா அதன் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை தொடர்ந்து பாதிக்கும் ஆழமான வடுக்களை குணப்படுத்த ஒரு வாய்ப்பு உள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றில், அதன் உறுதிமொழிகளை அர்த்தமுள்ள நடவடிக்கைகளாக மாற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
உள்நாட்டு நீதித்துறை செயல்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு நீண்டகால தண்டனை விலக்கு முடிக்கு கொண்டு வரப்படுவது அவசியம்.
முழுமையான சுதந்திரமான மற்றும் பயனுள்ள பொது வழக்குத்தொடுநர் அமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
மனிதப் புதைகுழிகள் உள்ள இடங்களில் விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதும், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதும் மிக முக்கியம்.
சிறிலங்காவுடன் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
