மேலும்

சிறிலங்காவின் குற்றவாளிகள் மீது அனைத்துலக தடைகளை விதிக்குமாறு கோரிக்கை

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, மேலும் தடைகளை விதிக்குமாறு ஐ.நா  மனித உரிமைகள் ஆணையாளர், வோல்கர் டர்க் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகிய,ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில், சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மனிதாபிமான சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தடைகளை மேலும் விதிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்த அதன் பணிகளை வலுப்படுத்தவும், கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடலையும், தொடர  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியத்திற்கான  ஆதரவையும் அவர் கோரியுள்ளார்.

கடந்த கால துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மிக முக்கியமானவை என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் பல ஆண்டுகளாக அரசின் பொறுப்பையும், இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுவதை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டதாகவும், வோல்கர் டர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“அனைத்து சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களின் வலி மற்றும் துயரத்தை சிறிலங்கா அதிபர் பகிரங்கமாக அங்கீகரித்துள்ளார்.

இந்த உத்வேகத்தை கட்டியெழுப்புவதும், உண்மையைச் சொல்வது, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாமல் தடுப்பது போன்ற வடிவங்களில் பொறுப்புக்கூறலுக்கான உறுதியான முடிவுகளாக மாற்றுவதும் முக்கியம்.

ஏனெனில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரவும், குணப்படுத்துதலுக்கும் இது அவசியம்.

ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வரவேற்கும்  அதேவேளை, பணியகத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்பாட்டில் சிவில் சமூக அமைப்புகளை முன்கூட்டியே சேர்ப்பதன் அவசியத்தையும், வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *