மேலும்

நீதி வழங்கத் தடையாக இருக்கிறது சட்டமா அதிபர் திணைக்களம்

மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா மனித உரிமைகள் நிலைமை, குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, சட்டமா அதிபரின் பங்கு குறித்து,  கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு, இது ஒரு பெரிய தடையாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் அதிகாரத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

அந்த அறிக்கையில்,  சட்டமா அதிபரின் பரந்த வழக்குத்தொடுப்பு விருப்புரிமை, உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்கள், வரையறுக்கப்பட்ட காவல்துறை விசாரணைத் திறன் மற்றும் தகுதிவாய்ந்த தடயவியல் மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் பற்றாக்குறை போன்றன,  போர்க்கால மீறல்கள் மற்றும் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில், தொடர்ந்து தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க பங்களித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் 2008-2009 க்கு இடையில் தமிழ் இளைஞர்கள் கட்டாயமாக காணாமல் போனது தொடர்பான ‘திருகோணமலை 11’ வழக்கு உள்ளிட்ட வழக்குகளை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

நீதிக்கான  வாக்குறுதிகள் இருந்தபோதிலும், இந்த வழக்குகளில் உறுதியான முன்னேற்றம் குறைவாகவே உள்ளது.

அத்துடன், “1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்முறை மற்றும் கொலை மட்டுமே, சிறிலங்கா படையினர் போர்க்கால பாலியல் வன்முறைக்கு தண்டனை பெற்ற ஒரே நிகழ்வாக உள்ளது.

பாலியல் வல்லுறவு செய்து கொல்ல உத்தரவிடப்பட்டதாக ஒரு சிப்பாய் சாட்சியமளித்த போதிலும், எந்த மேலதிகாரிகளும் விசாரிக்கப்படவில்லை.

2015 விஸ்வமடு வழக்கில், நான்கு  இராணுவத்தினர்  கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் 2019 இல் மேல்முறையீட்டில் அந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் கண்காணிக்கப்பட்ட மற்ற அனைத்து வழக்குகளும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டனர், இதனால் விசாரணைகள்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டன” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

சிறிலங்கா அரசாங்கம், அதன் கொள்கை அறிக்கையில், கடுமையான மனித உரிமை மீறல்களை விசாரிக்க,  சுயாதீனமான, பொது வழக்குத்தொடுநர் பணியகத்தை  நிறுவுவதாக உறுதியளித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *