சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கடத்த முயற்சி
சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெருசலேமைச் சேர்ந்த மதித்யாஹு கோர்மன் என்ற 23 வயதுடைய இளம் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சபாத் இல்லத்தைப் பார்வையிட்ட பின்னர், முச்சக்கர வண்டி ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
அவரை தனியானதொரு இடத்திற்கு கொண்டு சென்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர், அவரது கடவுச்சீட்டு மற்றும் பணப்பையை பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
முச்சக்கர வண்டி மிகவும் ஒதுக்குப் புறமான இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி அதில் இருந்து குதித்து உயர் தப்பியுள்ளார்.
இதனால், கைகளிலும் கால்களிலும் காயங்களுக்கு உள்ளான நிலையில், தப்பிச் சென்று அருகிலுள்ள சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடியில், விபரங்களை கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிக்கு உதவியுள்ளனர்.
சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை 4ஆம் நிலை பயண எச்சரிக்கையை வெளியிட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

