மீண்டும் வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொறுப்பு,மீண்டும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து இந்தப் பொறுப்பை சிறிலங்கா கடற்படை ஏற்றுக் கொள்கிறது.
பாதுகாப்பு அமைச்சரான, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஓகஸ்ட் 13 ஆம் திகதி முதல் சிறிலங்கா கடற்படையின் கடல்சார் சேவைகள் திட்டத்தின் கீழ், கடமைகள் மற்றும் பொறுப்புகளைக் குறிப்பிட்டு, அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இந்த நிறுவனங்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கையாளுதல் உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க சிறிலங்கா கடற்படைக்கு அதிகாரம் அளிக்கிறது.
அதன்படி, சிறிலங்கா கடற்படை தற்போது தொடர்புடைய செயற்பாட்டு நடைமுறைக்குத் தேவையான சட்ட கட்டமைப்பு மற்றும் ஏனைய உள்கட்டமைப்புகளை தயாரித்து வருகிறது என்று கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு ஜூலை 7 ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுதொடர்பான செயற்பாட்டு, நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படை முன்னர் இதுபோன்ற சேவைகளை வழங்கிய போதும், பின்னர் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சர்வதேச கடல் போக்குவரத்திற்கு கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சோமாலிய கடலைச் சுற்றியுள்ள பகுதியை- 2010 ஆம் ஆண்டில், சர்வதேச கடல்சார் அமைப்பு, அதிக ஆபத்து வலயமாக அறிவித்தது.
அதிக ஆபத்து வலயத்திற்குள் நுழையும் வணிகக் கப்பல்கள் வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து ஆயுதமேந்திய கடல்சார் காவலர்களின் சேவைகளைப் பெறுகின்றன.
2013 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பு,அதிக ஆபத்து வலய வகைப்பாட்டை நீக்கிய போதிலும், வர்த்தக கப்பல்கள் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவைகளைத் தொடர்ந்து பெறுகின்றன.
