புதுடில்லியில் இந்திய- சிறிலங்கா கடலோர காவல்படைகளின் உயர்மட்டக் கூட்டம்
இந்திய கடலோர காவல்படை மற்றும் சிறிலங்கா கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, 8வது உயர்மட்டக் கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
இரு நட்புறவுள்ள அண்டை நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கடல்சார் பங்காளித்துவத்தின் மற்றொரு மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம், றியர் அட்மிரல் வை.ஆர்.சேரசிங்க தலைமையிலான சிறிலங்கா குழுவினரும், இந்திய கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம் பரமேஷ் சிவமணி, தலைமையிலான இந்தியக் குழுவினரும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
2018 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளினதும் கடலோரக் காவல்படைகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், உயர்மட்டக் கூட்டம் மற்றும் ஏனைய தொழில்முறை தொடர்புகளுக்காக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் குழு ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறதுது.
கடல் மாசுபாட்டுக்கு பதிலளித்தல், கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் கடல்சார் சட்ட அமுலாக்கம் ஆகிய துறைகளில் கூட்டு ஈடுபாடுகளை வலுப்படுத்துவது, மேம்பட்ட திறன் விருத்தி மற்றும் தொழில்நுட்ப உதவி முயற்சிகள் ஆகியன தொடர்பாக இந்த உயர்மட்டக் கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
சமகால கடல்சார் சவால்களை எதிர்கொள்வதிலும், பகிரப்பட்ட கடல்சார் களத்தில் பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தை உறுதி செய்வதிலும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
செயற்பாட்டு ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துதல், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் நிலையான ஒத்துழைப்பு மூலம் பிராந்திய கடல்சார் நிலைத்தன்மையை மேலும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.